நெல்லையில் போலி பாஸ்போர்ட் மூலம் முஸ்லிம் பெயருடன் சவூதி அரேபியாவுக்குச் செல்லமுயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் குற்றாலம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் ஜூப்லி என்ற முஸ்லிம் பெயரில் இருந்த ரேசன் கார்டை பயன்படுத்தி கடந்த 97 மார்ச் 26ம் தேதி பாஸ்போர்ட் வாங்கியுள்ளார்.
சவூதி அரேபியாவில் புனித நகரங்களான மக்கா,மதினாவில் முஸ்லிம்களுக்கு வேலையில் முன்னுரிமை கிடைக்கும் என்பதால் முஸ்லிம் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து பாஸ்போர்ட் எடுத்ததாக போலீசாரிடம் செல்வகுமார் தெரிவித்தார். இதுவரை 4 முறை போலி பாஸ்போர்ட் மூலம் சவூதி அரேபியா சென்று வந்த செல்வகுமார் நேற்று ஐந்தாவது முறையாக காலை 5.30 மணிக்கு திருவனந்தபுரம் சென்று விமானம் மூலம் பஹ்ரைன் சென்று அங்கிருந்து சவூதி அரேபியா செல்ல திட்டமிட்டுருந்தார்.
அதற்குள் அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த போலி பாஸ்போர்ட்டும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து எஸ்பி ஆஸ்ரா கார்க் கூறும்போது, 'நெல்லை மாவட்டத்தில் யாராவது போலி பெயர், போலி ஆவணம் மூலம் பாஸ்போர்ட் வாங்கியது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற தகவல்களை sptveli@yahoo.comஎன்ற இ-மெயில் முகவரிக்கு பொதுமக்கள் தெரிவிக்கலாம்' என்றார்.